நடிகர் சங்க தேர்தல் – சாதித்தது விஷாலின் பாண்டவர் அணி!

நடிகர் சங்க தேர்தல் – சாதித்தது விஷாலின் பாண்டவர் அணி!

Nadigar Sangam 2015 விஷாலின் பாண்டவர் அணி - actoractressin
பரபரப்பாக நடந்து முடிந்து நடிகர் சங்க தேர்தலில், விஷால் அணியினர் அமோக வெற்றி பெற்று சாதனை படைத்துள்ளனர். தலைவர் பதவிக்கு நாசரும், பொதுச்செயலாளர் பதவிக்கு விஷாலும், பொருளாளர் பதவிக்கு கார்த்தியும் தேர்வாகியுள்ளனர்.

அனல் பறந்த தேர்தல் களம்

ஒரு மாதமாக, தமிழகத்தில் பெரும் பரபரப்பை ஏற்படுத்திய, தென்னிந்திய நடிகர் சங்க தேர்தல், சென்னையில் நடந்து முடிந்துள்ளது. எந்த ஆண்டும் இல்லாத அளவுக்கு இந்தாண்டு தேர்தல் விறுவிறுப்பாக, அனல் பறக்க நடந்தது. கடந்த மூன்று முறை தலைவராக இருந்த சரத்குமாரை எதிர்த்து விஷாலின் பாண்டவர் அணியினர் களம் இறங்கினர். இதனால் இந்தாண்டு தேர்தல் அனல் பறந்தது. தேர்தல் தேதி அறிக்கவிப்பட்ட நாள் முதல் இரண்டு அணியினரும் மாறி மாறி ஒருவர் மீது குற்றம் சாட்டினர். அதிலும் சரத்குமார் அணியில் உள்ள ராதாரவி, சிம்பு போன்றோர் எதிர் அணியினர் மீது கடுமையான வார்த்தைகளாலும், அநாகரிகமான பேச்சாலும் வசை பாடினர்.

ஜனநாயக முறைப்படி தேர்தல்

தென்னிந்திய நடிகர் சங்க தேர்தலில் தலைவர், துணைத்தலைவர், பொருளாளர், 24 உறுப்பினர்கள் உள்ளிட்ட 29 பதவிகளுக்காக தேர்தல் நடந்தது. இதில் சரத்குமார் தலைமையிலான அணி மற்றும் விஷால் தலைமையிலான அணிகளுக்கு இடையே கடும் போட்டி நிலவியது. சென்னை, மயிலாப்பூர், ராதாகிருஷ்ணன் சாலையில் உள்ள தனியார் பள்ளி வளாகத்தில் காலை 7 மணிக்கு துவங்கி மாலை 5 மணி வரை நடந்தது.

சாதித்தது பாண்டவர் அணி

நாசர் வெற்றி : நடிகர் சங்க தேர்தலில் தலைவர் பதவிக்கான போட்டியில் நாசர், சரத்குமார் மற்றும் சிவசாமி ஆகிய மூன்று பேர் போட்டியிட்டனர். இதில் நாசருக்கு 1344 ஓட்டுகளும், சரத்குமாருக்கு 1235 ஓட்டுகளும், சிவசாமி என்பவருக்கு 4 ஓட்டுகளும் கிடைத்தன. இதன்மூலம் நாசர் 109 ஓட்டுகள் வித்தியாசத்தில் வெற்றி பெற்று இருக்கிறார்.

விஷால் வெற்றி : பொதுச்செயலாளர் பதவிக்கு விஷாலும், ராதாவியும் போட்டியிட்டனர். இதில் விஷால் 1445 ஓட்டுகளும், ராதாரவி 1138 ஓட்டுகளும் பெற்றனர். இதன்மூலம் 307 ஓட்டுகள் வித்தியாசத்தில் விஷால் வெற்றி பெற்று இருக்கிறார்.

கார்த்தி வெற்றி : பொருளாளர் பதவிக்கு கார்த்தியும், எஸ்.எஸ்.ஆர்.கண்ணன் போட்டியிட்டனர். இதில் கார்த்திக்கு 1493 ஓட்டுகளும், எஸ்.எஸ்.ஆர்.கண்ணனுக்கு 1080 ஓட்டுகளும் பெற்றனர். இதன்மூலம் கார்த்தி 413 ஓட்டுகள் வித்தியாசத்தில் வெற்றி பெற்றுள்ளார்.

கருணாஸ், பொன்வண்ணன் வெற்றி

நடிகர் சங்க தேர்தலில் துணைத்தலைவர் போட்டியில் விஷால் அணியின் கருணாஸ், பொன்வண்ணன் வெற்றி பெற்றுள்ளனர். கருணாஸ் 1,362 ஓட்டுகளும், பொன்வண்ணன் 1,235 ஓட்டுகளும் பெற்று வெற்றி பெற்றனர். எதிர்த்து போட்டியிட்ட விஜயகுமார் 1,115 ஓட்டுகளும், சிம்பு 1,107 ஓட்டுகள் மட்டுமே பெற்றனர்.

செயற்குழு உறுப்பினர்கள் : 24 செயற்குழு உறுப்பினர்கள் பதவிக்கு, விஷால் அணியில், நந்தா, குட்டி பத்மினி, கோவை சரளா, விக்னேஷ், பிரசன்னா, ரமணா, பூச்சி முருகன், ராஜேஷ், பசுபதி, சங்கீதா, சீனிவாச ரெட்டி, தளபதி ரமேஷ், ராஜேஸ், ஜூனியர் பாலையா, சிவகாமி, பிரகாஷ், பாலதண்டாயுதபானி, அயூப்கான், பிரேம்குமார், உதயா ஆகிய 20 பேர் வெற்றி பெற்றுள்ளனர். காளிமுத்து, காமராஜ், சபாபதி, விஸ்வநாதன் ஆகியோர் தோல்வியடைந்தனர். சரத்குமார் அணியில் ராம்கி, நிரோஷா, நளினி, டி.பி.கஜேந்திரன் ஆகிய 4 பேர்கள் மட்டுமே வெற்றி பெற்றுள்ளனர்.

அநேக நடிகர்கள் ஓட்டுப்பதிவு

நடிகர் சங்க தேர்தலில் மூத்த நடிகர்கள் முதல் இன்றைய இளம் நடிகர்கள் வரை பலர் வந்து தங்களது ஓட்டை பதிவு செய்தனர். ரஜினி, கமல், விஜயகாந்த், விஜய், ராதாரவி, விஷால், சரத்குமார், கார்த்திக், கார்த்தி, சிவகார்த்திகேயன், நாசர், மன்சூர் அலிகான், சசிகுமார், சமுத்திரகனி, ஆர்யா, சிம்பு, ஜெயம் ரவி, விக்ரம், அர்ஜூன், ஜிவி.பிரகாஷ் குமார், பிரபு, விக்ரம் பிரபு, எஸ்வி சேகர், சாந்தனு, சுரேஷ், பிரசன்னா, கருணாஸ், போண்டா மணி, கிங்காங், ராமராஜன், அம்பிகா, ராதா, ராதிகா, லட்சுமி, சுகாசினி, குட்டி பத்மினி, பசி சத்யா, கே.ஆர்.விஜயா, சீமா, லதா, ரேவதி, அர்ச்சனா, சினேகா, சங்கீதா, குஷ்பு, உள்ளிட்ட பலர் நடிகர்கள் ஆர்வமுடன் ஓட்டளித்தனர்.

83 சதவீதம் ஓட்டுப்பதிவு

நடிகர் சங்கத்தில் மொத்தம் 3139 பேர் உறுப்பினர்களாக உள்ளனர். இதில் 1824 பேர் நேரடியாகவும், 783 பேர் தபால் ஓட்டுக்கள் மூலம் ஓட்டை பதிவு செய்தனர். எந்த வருடமும் இல்லாத அளவுக்கு இந்தாண்டு நடிகர் சங்கத்தில் 83 சதவீதம் ஓட்டுக்கள் பதிவாகியுள்ளதாக தேர்தல் அதிகாரி தெரிவித்தார்.

தேர்தல் தோல்வியை தலைவணங்கி ஏற்கிறேன் – ராதாரவி

நடிகர் சங்க தேர்தல் முடிவை தலைவணங்கி ஏற்பதாக நடிகர் ராதாரவி கூறியுள்ளார். தென்னிந்திய நடிகர் சங்க தேர்தல் பரபரப்பாக நடந்து முடிந்துள்ளது. பொதுச்செயலாளர் பதவிக்கு சரத்குமார் அணி சார்பில் ராதாரவியும், நாசர் அணி சார்பில் விஷாலும் போட்டியிட்டனர். இதில் விஷால் 1445 ஓட்டுகளும், ராதாரவி 1138 ஓட்டுகளும் பெற்றனர். இதன்மூலம் 307 ஓட்டுகள் வித்தியாசத்தில் விஷால் அமோக வெற்றி பெற்று இருக்கிறார். தேர்தல் முடிவுக்கு பின்னர் செய்தியாளர்களிடம் பேசிய ராதாரவி… தேர்தல் முடிவை தலைவணங்கி ஏற்கிறேன். விஷாலுக்கும், அவரது அணியினருக்கும் எனது வாழ்த்துக்கள். அவர்கள் உழைப்புக்கு கிடைத்த வெற்றியாக இதை நான் கருதுகிறேன் என்று கூறியுள்ளார்.

You may also like...

%d bloggers like this: