நடிகர் சங்கத் தேர்தலில் விஷாலின் பாண்டவர் அணி வெற்றி

பரபரப்பாக நடந்து முடிந்த நடிகர் சங்கத் தேர்தலில் மாற்றத்தின் அறிகுறியாக விஷாலின் பாண்டவர் அணி வெற்றி பெற்றுள்ளது. தலைவர், பொதுச்செயலாளர், பொருளாளர் மற்றும் 2 துணைத்தலைவர் பதவி என முக்கியமான பொறுப்புகளை பாண்டவர் அணி கைப்பற்றி இருக்கிறது. தபால் ஓட்டுக்களில் முன்னணி வகித்த சரத்குமார் அணியை வீழ்த்தி சென்னை ஓட்டுக்களால் வெற்றியை தன் வசப்படுத்தி இருக்கிறது பாண்டவர் அணி . முக்கியமாக விஷால் நடிகர் ராதாரவியை விட 307 வாக்குகள் அதிகம் பெற்று வெற்றி பெற்றிருக்கிறார். இதே போன்று தலைவர் பதவிக்கு போட்டியிட்ட நாசர் துணைத்தலைவர் பதவிக்கு போட்டியிட்ட பொன்வண்ணன், கருணாஸ் மற்றும் பொருளாளர் பதவிக்கு போட்டியிட்ட கார்த்தி ஆகியோரும் வெற்றியை பரிசாகப் பெற்றனர்.
விஷாலின் பாண்டவர் அணி - actoractressin

நடிகர் சங்கத் தேர்தல் 9 ஆண்டுகளுக்குப் பின் பல்வேறு போராட்டங்களை சந்தித்து நேற்று நடிகர் சங்கத் தேர்தல் வரலாறு காணாத பாதுகாப்புடன் நடந்து முடிந்தது. 2௦௦௦ க்கும் அதிகமான போலீஸ் மற்றும் ஆங்காங்கே சிசி டிவி கொண்டு தேர்தலை கண்காணித்தனர். ஆனால் இவற்றையும் மீறி 2 தரப்பினருக்கும் இடையே மோதல் வெடித்தது.

விஷால் மயக்கம் இந்தத் தள்ளு முள்ளு மற்றும் மோதலில் பாண்டவர் அணியைச் சேர்ந்த விஷால் மயக்கம் அடைந்தார். அவரை யாரோ தாக்கியதாகவும் அதனால் அவரின் கைவிரலில் காயம் ஏற்பட்டதாகவும் தகவல்கள் வெளியாகின. இதனால் அந்த இடம் போர்க்களம் போல மாறத் துவங்கியது. பின்னர் நீதிபதி பத்மநாபன் எச்சரிக்கையின் பேரில் 2 அணியினரும் மோதலைக் கைவிட்டு சமாதானம் அடைந்தனர்.

தாமதமாக வெளியான அறிவிப்புகள் நேற்று இரவு 9 மணிக்கே முடிவுகள் வெளியாகி விடும் என்று கூறியிருந்தனர். ஆனால் எதிர்பாராத காரணங்களால் தேர்தலின் முடிவுகள் தாமதமாகவே வெளியாகின, அனைவரும் எதிர்பார்த்ததைவிட பாண்டவர் அணியினர் அதிக வாக்குகளை பெற்று நடிகர் சங்கத் தேர்தலில் முக்கிய பொறுப்புகளை கைப்பற்றினர்.

அபார வெற்றி தலைவர் பதவிக்குப் போட்டியிட்ட நாசர், எதிரணியின் சரத்குமாரை 109 வாக்குகள் அதிகம் பெற்று தோற்கடித்தார்.விஷால் 307 வாக்குகள் அதிகம் பெற்று ராதாரவியைத் தோற்கடித்தார். பொருளாளர் பதவிக்கு விஷால் அணி சார்பில் கார்த்தியும், சரத் அணி சார்பில் எஸ்எஸ்ஆர் கண்ணனும் போட்டியிட்டனர். இந்த மோதலில் கார்த்தி அபாரமாக 413 வாக்குகள் அதிகம் பெற்று கண்ணனைத் தோற்கடித்தார். 2 துணைத்தலைவர் பதவிகளுக்கு விஷால் அணி சார்பில் போட்டியிட்ட கருணாஸ் 1362 வாக்குகள் பெற்றார். எதிர்த்த விஜயகுமார் 1115 வாக்குகள் பெற்றுத் தோற்றார். பொன்வண்ணன் 1235 வாக்குகள் பெற்றார். அவரை எதிர்த்துப் போட்டியிட்ட சிம்பு 1107 வாக்குகளை மட்டுமே பெற்றார். இதன் மூலம் நடிகர் சங்கத்தின் அனைத்து முக்கியப் பொறுப்புகளையும் விஷாலின் பாண்டவர் அணி கைப்பற்றியுள்ளது.

24 செயற்குழு உறுப்பினர்கள் செயற்குழு உறுப்பினர் பதவிகளுக்கான முடிவு சற்று முன்னர் வெளியானது இதில் பாண்டவர் அணி 20 இடங்களையும் சரத்குமார் அணி 4 இடங்களையும் கைப்பற்றி இருக்கிறது

நாசர் வெற்றிபெற்ற பின்னர் நடிகர் நாசர் தனது அணியினருடன் பத்திரிக்கையாளர்களை சந்தித்துப்பேசினார் நாசர் பேசுகையில் “யாரையும் புறக்கணிக்க எண்ணி இந்த தேர்தல் நடத்தப்படவில்லை,ஒரு மாற்றம் தேவை அவ்வளவு தான். மூத்தக் கலைஞர்களும், இளைஞர்களும் ஒன்று கூடி நடிகர் சங்கத்தை வேறு ஒரு தளத்திற்குக் கொண்டு செல்வோம். மிக முக்கியமாக ரஜினி, கமல், ஆர்யா, விஜய் சேதுபதி, ஏன் சக்கர நாற்கலியில் கூட பலர் வந்தனர். தேர்தல் இதுவரை இல்லாத அளவிற்கு வெகு விமரிசையாக நடந்து முடிந்துள்ளது.

5 பேர் மட்டுமே இருந்தோம் முதலில் இந்த மாபெரும் திருவிழாவில் கலந்துகொண்ட எல்லா அங்கத்தினருக்கும் நன்றி. இளைய தலைமுறைக்கும் நன்றி. திடீர் சவால்,வெறும் ஐந்து பேர் மட்டுமே இருந்தோம்,அப்படி இருக்கையில் இது மிகப்பெரிய வெற்றி. நாங்கள் ஒன்றாக இருப்போம். நானும் சரத்குமாரும் இந்த தேர்தல் முடிந்தவுடன் ஆரத் தழுவி கட்டியணைத்து பரஸ்பரம் எங்கள் வாழ்த்துகளையும் , நன்றிகளையும் தெரிவித்தோம். இதுகுறித்து முழுமையான பத்திரிகையாளர் சந்திப்பு கண்டிப்பாக நிகழும்.

போர்வாளாகப் பணியாற்றுவேன் நான் தலைவராக இருந்தாலும் ஒரு போர்வாளாக செயல்படுவேன். கண்டிப்பாக குடும்பமாக செயல்படுவோம்.தேர்தல் முடிவுகள் வந்த பிறகு நானும் சரத்குமாரும் ஆரத் தழுவி கட்டியணைத்து பரஸ்பரம் மகிழ்ச்சியை பகிர்ந்துகொண்டோம் மேலும் தற்போதைய மனநிலையில் மகிழ்ச்சியான இந்தத் தருணத்தை அனுபவிக்கவே நினைக்கிறோம்” எனக்கூறினார்.

விஷால் பொதுச்செயலாளர் விஷால் பேசும்போது “நல்ல விஷயம் நடந்துள்ளது. எத்தனையோ சங்கங்கள் இருக்கு. சக நடிகர்களுக்கு நல்லது செய்யணும்னு துவங்கியிருக்கோம். முக்கியமாக இந்த நேரத்தில் முதல்வர் அம்மாவுக்கும், காவல் துறைக்கும் எனது மிகப்பெரிய நன்றிகள். என் நண்பன் ரித்தீஷ்க்கு என்னோட மிகப்பெரிய நன்றி. ஒரு கலை நிகழ்ச்சியை விட சிறப்பாக நடந்து முடிந்துள்ளது. இது ஒரு வரலாற்று நிகழ்ச்சி. சக்கர நாற்காலியில், நடக்க முடியாமல், கண் பார்வையில்லாமல் நான் பார்த்ததுக் கூட இல்லை இப்படியெல்லாம் அவர்கள் எல்லாம் வந்து வாக்களித்தார்கள் அனைவருக்கும் நன்றி” என்று கூறினார்.

கார்த்தி பொருளாளர் கார்த்தி பேசுகையில் “சங்கத்துக்கு ஒரு புத்துணர்ச்சி கிடைத்துள்ளது. எங்கள் மேல் நம்பிக்கை வைத்து வாக்களித்த, வாக்களிக்காத அனைவருக்கும் நன்றி. முதற்கட்டமாக சங்கத்தில் உள்ள உறுப்பினர்கள் பட்டியல் சரிசெய்யப்பட்டு , அவர்களின் தேவைகள் குறித்து நடவடிக்கை எடுக்க உள்ளோம்.முக்கியமாக ஊடகங்களுக்கு நன்றி “என்று கூறினார்.

சரத்குமார் வெற்றிப்பெற்ற அணிக்கு வாழ்த்துகளை கூறிய முன்னாள் சங்கத் தலைவர் சரத்குமார் “வெற்றி பெற்ற விஷால் அணிக்கு வாழ்த்துகள். இனி எல்லோரும் ஒரே குடும்பமாக செயல்படுவோம். வெற்றி தோல்வி சகஜம். தோல்வியை ஏற்றுக்கொள்கிறேன்” என்று கூறினார்.

ராதாரவி பொதுச்செயலாளர் பதவிக்கு போட்டியிட்ட நடிகர் ராதாரவி தேர்தல் முடிவுகளுக்குப் பின்னர் பத்திரிகையாளர்களிடம் பேசும்போது “விஷால் அணியின் வெற்றியை தலைவணங்கி ஏற்றுக்கொள்கிறேன்” என்று தேர்தல் முடிவு குறித்து கருத்து தெரிவித்துள்ளார். விரைவில் பாண்டவர் அணியின் பதவியேற்பு விழா விமரிசையாக நடைபெறவிருக்கிறது.

Source: tamil.oneindia.com

You may also like...

%d bloggers like this: